திருமாவளவன்
திருமாவளவன்

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டம் உறுதி: பங்கேற்க திருமாவளவனுக்கு காங்கிரஸ் அழைப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் வருகிற 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தில், "தொல். திருமாவளவன் அவர்களே 17 ஜூலை 2023 அன்று மாலை 6.00 மணிக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் 18 ஜூலை 2023 அன்று காலை 11.00 மணி முதல் தொடரும். உங்களை பெங்களூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு திருமாவளவன் கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு வாரமாக, பெங்களூருவில் நடக்கவிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கக்கூடாது என தமிழக பாஜகவினர் பேசிவருகின்றனர். மேகே தாட்டு அணை கட்டுவதில் காங்கிரஸ் அரசு உறுதியாக இருப்பதால், தமிழக நலனுக்கு எதிரானது எனவும் அப்படிப்பட்ட கர்நாடக அரசு நடத்தும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பங்கேற்கக்கூடாது எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.

அதேபோல, மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவு எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வை சிதைக்கும் என பாஜக கணக்குப் போட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்துவதில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் உறுதிகாட்டியுள்ளனர் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

logo
Andhimazhai
www.andhimazhai.com