குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

சி. பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன ரெட்டி
சி. பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன ரெட்டி
Published on

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் அவர்கள் இருவரும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் நாடாளுமன்ற இரு அவைகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். நேற்று அவர்கள் இருவரும் தங்களது இறுதிக்கட்ட ஆதரவு திரட்டலை நடத்தி முடித்தனர்.

குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பார்கள். மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர மாநிலங்களவையில் 12 நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

மொத்தம் 782 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களிக்கத் தகுதியானவர்களாக உள்ளனர். இந்த 782 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 392 வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். தற்போது இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலம் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்குப் பெரும்பான்மை பெறும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலம் இல்லை. எனவே இன்று நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நபராகப் பிரதமர் மோடி வாக்களித்துள்ளார்.

மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com