கொட்டும் மழையில் சாலை அமைக்கும் பணி
கொட்டும் மழையில் சாலை அமைக்கும் பணி

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ஆபீசர்!?

அரியானா மாநிலம் கர்னால் பகுதியில், கொட்டும் மழையிலும் ஊழியர்கள் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலான நிலையில், ‘உங்களின் கடமை உணர்ச்சிக்கு அளவு இல்லையா’ என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்துவருகிறது. குறிப்பாக கேரளா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரியானா மாநிலம் கர்னால் பகுதியில்  கொட்டும் மழையிலும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலான நிலையில், கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று யார் சொன்னது. அரியானாவில் உள்ள கர்னால் நகரில் போர்க்கால அடிப்படையில் மோசமான சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. சிறப்பான வேலை நரேந்தர் ஜி" என்று கிண்டலடித்துள்ளது.

மேலும், மழையில் போடப்பட்ட சாலையை முற்றிலும் அகற்றிவிட்டு, மீண்டும் புதிய சாலை அமைக்கும்படி ஒப்பந்ததாரருக்கு அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

900 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலையானது 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுவதால், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள் அம்மாநில எதிர்க்கட்சியினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com