மதராசா இடிப்பின் போது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி, 250 பேர் காயம்!

மதராசா இடிப்பின் போது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி, 250 பேர் காயம்!

உத்தராகண்ட் மாநிலம் ஹல்ட்வானியில் மதராசா இடிப்பின்போது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி உள்ள உத்தரகாண்டில் வன்முறை வெடித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மதராசாவை நீதிமன்ற உத்தரவுடன் நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினருடன் சேர்ந்து நேற்று இடிக்க முயன்றனர்.

அதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் அந்த கட்டடத்தை புல்டோசர் உதவியுடன் இடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். மேலும் பல அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதும் அவர்கள் கற்களை வீசினர். இதில் பலர் காயமடைந்தனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதனைத் தொடர்ந்து வன்முறைக்காரர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். 20க்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகள் மற்றும் ஒரு பாதுகாப்பு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.

இந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையச் சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹல்த்வானி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com