சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் துணைத் தலைவராக இந்தியாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளருமான விவேக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு பாரிசைத் தலைமையாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. சர்வதேச அளவில் பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், பேரழிவுக்கு நிதியளித்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அமைப்பாகும். இந்தியா 2010 முதல் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
கடந்த ஜூன் 17 முதல் 19 வரை நடைபெற்ற நிதி நடவடிக்கை பணக்குழுக் கூட்டத்தில், குழுவின் தலைவராக கைல்ஸ் தாம்சனும், துணைத் தலைவராக விவேக் அகர்வாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்.
இந்தியர் ஒருவர் இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னர், சர்வதேச நிதி நடவடிக்கையைக் கண்காணிக்கும் இந்திய குழுவிற்கு இவர் தலைமைத் தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேக் அகர்வால்," சர்வதேச நிதியமைப்பைப் பாதுகாப்பானதாகவும், உறுதியானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இணைந்து உலகளவில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று கூறியுள்ளார்.