ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் எஃகு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி ஆகியுள்ளனர்.
‘விசாகா' என்னும் அரசுக்குச் சொந்தமான எஃகு ஆலையில், நேற்று வழக்கம்போல் எஃகு உருக்கும் பணி நடந்துவந்தது. உருக்கப்பட்ட எஃகு கலன்கள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டபோது, ஒரு கலன் வெடித்துச் சிதறியது.
சுமார் 1600 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் இருந்த எஃகு பணியாளர்கள் மீது சிதறியது. இதில் 5 நிரந்தரப் பணியாளர்கள், 3 ஒப்பந்தப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிரந்தர ஊழியர்களுக்கு தலா 1.72 கோடி ரூபாயும், மாதாந்திர ஓய்வூதியமும்; ஒப்பந்த ஊழியர்களுக்கு தலா 45.7 இலட்சமும், வருங்கால வைப்புநிதியிலிருந்து மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று ஆந்திர துணைமுதலமைச்சர் அறிவித்தார்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.