சரணடைகிறோம்… 3 மாநில முதல்வர்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் எழுதிய கடிதத்தில் என்ன உள்ளது?

ம்ாவீ
ம்ாவீ
Published on

ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு சரணடைவதாக மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சிறப்பு மண்டலக் குழுவின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஆனந்த் என்பவரின் பெயரில் நவம்பர் 22ஆம் தேதி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் ”மாறிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு எங்கள் மத்தியக் குழு உறுப்பினர்கள் சோனி, சதீஷ், சந்திரண்ணா ஆகியோர் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு சரணடைவது என்று முடிவெடுத்துள்ளனர். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவும், எங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அரசின் திட்டத்தில் சேரவும் முடிவு எடுக்க பிப்.15 வரை அவகாசம் வேண்டும். அதுவரை எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

தலைமறைவாகச் செயல்படும் எங்களுக்கு இடையே தொடர்புகொள்ள வேகமான, பாதுகாப்பான தொலைத்தொடர்பு வசதி இல்லை. ஒருவரை ஒருவர் தொடர்புகொள்வதற்கு வேகமான வழிமுறை இல்லாததால், பிப்.15 வரை அவகாசம் அளிப்பது அவசியமாகும். எனினும் இந்த அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் மாவோயிஸ்ட்டுகளை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள்தான் உள்ளது.

சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் யூடியூபர்கள் எங்களுக்கும் அரசுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யவும் எங்கள் கோரிக்கையை அரசிடம் எடுத்துச் செல்லவும் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com