அடுத்த ஆண்டிற்குள் 1000 ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளை நிறுவ வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சி, மாவட்டம் ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கின் கல்விப் பிரிவான வித்யா பாரதி அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வித்யா பாரதி அமைப்பின் தலைவர்களையும், அம்மாநிலத்தின் கல்வி அதிகாரிகளையும் சந்திக்க வைத்த முதலமைச்சர் சுவேந்து, அம்மாநிலத்தில் உள்ளப் பள்ளிகளில் தேசியம் சார்ந்த கல்வியைக் கொண்டுசேர்க்க வேண்டியது வித்யா பாரதி அமைப்பின் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.
மேற்கு வங்காளத்தில் தற்போது 313 வித்யா பாரதி பள்ளிகள் இயங்கிவருகின்றன. தேசிய அளவில் 12,000 வித்யா பாரதி பள்ளிகளும், 10,000 பால சன்ஸ்கர் கேந்திரா பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
இதுகுறித்து வித்யா பாரதி அமைப்பின் 74ஆவது ஆண்டு விழாவில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, "மேற்கு வங்காளத்தில் உள்ள நடுநிலைக் கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சிறுபான்மையினர் கல்வி ஆகியவற்றை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். இனி மதரசா கல்வித் துறை இருக்காது. முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் மாநிலத்தின் கல்வித் துறையை சீரழித்துவிட்டனர். இதிலிருந்து வெளியேற வித்யா பாரதி அமைப்பின் உதவி தேவை." என்று சுவேந்து அதிகாரி கூறினார்.
வித்யா பாரதி பள்ளிகள் மாணவர்களுக்கு இந்தியாவுக்கேற்ற கல்வியையும், சில பூஜைகள் குறித்தும் கற்பதாக அந்த அமைப்பைச் சாரந்த சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
மேலும், 150 சன்ஸ்கர் கேந்திரா பள்ளிகள் அங்கு இயங்கி வருவதாகவும், அங்கு இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், பூஜைகள் குறித்தும் கற்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.