தேஜகூ தலைவர்களுடன் மோடி
தேஜகூ தலைவர்களுடன் மோடி

அண்ணாமலை அமைச்சர்! தமிழிசைக்கு தலைவர் பதவி! பரபரக்கும் தமிழக பாஜக!

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய முற்போக்குக்கூட்டணி சார்பாக மூன்றாவது முறையாக நரேந்திரமோடி இன்று மாலை பிரதமராக பதவி ஏற்கிறார். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் பதவி ஏற்பதால் எந்தக் கட்சிகளுக்கு எந்த அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட இருக்கின்றன என்பது பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது.

உள்துறை, நிதி, வெளியுறவு, ராணுவம், கல்வி கலாச்சாரம் ஆகிய முக்கிய துறைகளை பாஜகவே வைத்துக்கொள்ளும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவை அல்லாத பிற துறைகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், சிவ்ராஜ் சிங் சௌகான், ப்சவராஜ் பொம்மை, மனோஹர் லால் கட்டார், சரபானந்த சொனாவால் போன்றவர்களுக்கு புதிய அமைச்சரவையில் கட்டாயம் இடம் கிடைக்கும்.

தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக ராம் மோகன் நாயுடு, ஜே டி யூ சார்பாக லலன் சிங், சஞ்சய் ஜா, ராம் நாத் தாக்குர், லோக் ஜனசக்தியின் சிராக் பஸ்வான் போன்றவர்களை புதிய அமைச்சரவையில் எதிர்பார்க்கலாம். மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் குமார சாமிக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தலைவர் ஜேபி நட்டா கூட அமைச்சரவையில் இணையலாம். தலைவர் பதவிக்கு வேறு மூத்த தலைவர் நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை முந்தைய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு இணைஅமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருந்தது. அவர் நீலகிரி தொகுதியில் இருந்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும் மத்தியபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்து அவற்றைத்துறந்து போட்டியிட்ட தமிழிசை சௌந்தர ராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருமே தற்போதைக்கு மத்திய அமைச்சர் பதவிக்கு கருத்தில் கொள்ளப்படும் நிலையில் இருப்பதாக கருதப்பட்டது. இம்மூவரில் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்பட்டு, தமிழிசை தமிழக பாஜக தலைவர் ஆக்கப்படுவார் என்று தெரிவதாக பாஜக உள்வட்டாரங்களில் செய்தி அடிபடுகிறது. ஏற்கெனவே தமிழக தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் உள்கட்சி முரண்பாடுகள் வெளியே தெரிய வந்துவிட்ட நிலையில் இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com