மக்களுடன் பிரியங்கா காந்தி
மக்களுடன் பிரியங்கா காந்தி

ராகுலைப் பின்னுக்குத் தள்ளுவாரா பிரியங்கா?

பின்னணியில் இருந்து அரசியல் செய்துவந்த பிரியங்கா காந்தி, முதல் முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்... இராகுலின் வயநாடு தொகுதியில்!

இராகுல் காந்தியைப் போல காங்கிரசின் ஈர்ப்புமிக்க துடிப்பான இளம் தலைவராக அறியப்படுபவர், இவர். பிரியங்காவின் எளிமையும் பேச்சும் பிரச்சாரமும் எதிர்க்கட்சியினரைத் திக்குமுக்காடவே செய்கிறது.

உளவியலிலும் பெளத்தத்திலும் பட்டம் பெற்றவரான பிரியங்கா, கடந்த 20 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இருந்தாலும், 2019இல்தான் கட்சி நிர்வாகியாக மாறினார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டவருக்கு, முதலில் கிழக்கு உத்தரப்பிரதேசமும் பின்னர் மொத்த உ.பி. மாநிலமுமே பொறுப்பாகத் தரப்பட்டது.

அதற்கு உ.பி.யில் அவருக்கு உண்டான செல்வாக்கே காரணம்.

உ.பி.யில் பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்த பிரியங்கா காந்தி மாநிலம் முழுவதும் ஓடியாடி வேலைசெய்தார். குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவரின் களப்பணியை யாரும் குறைத்துச் சொல்லமுடியாது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியால் அங்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

அதைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதுமே, உ.பி.யில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார் பிரியங்கா. அமேதி, ரேபரேலியில் நடைபெற்ற தொழிலாளர் மாநாடுகளில் பங்கேற்பு, 108 பொதுக்கூட்டங்கள், அதிகமான வாகனப் பேரணி நடத்தியது என உ.பி. முழுக்க பிரியங்கா காந்தியின் குரல் ஓங்கி ஒலித்தது.

மேலும், 16 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என அவரின் தேர்தல் பிரச்சாரம் நீண்டது.

கூட்டத்தைக் கட்டிப்போடும் அவரின் பேச்சால், குறுகிய காலத்திலேயே முன்னணித் தலைவர்களில் ஒருவராக ஆனதோடு, ஊடகங்கள் தவிர்க்கமுடியாத ஒரு முகமாகவும் உருவெடுத்தார்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

இந்த நிலையிலேயே, பிரியங்கா காந்தி வயநாட்டின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவின் வயநாடு இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற இராகுல், ஏதாவது ஒரு தொகுதியில் பதவிவிலகியாக வேண்டும்.

அந்த விதிப்படி வயநாட்டை விட்டுவிட்டு ரேபரேலி தொகுதி எம்.பியாகத் தொடர்வார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே, அமேதி அல்லது வயநாடு தொகுதியின் வேட்பாளராக பிரியங்கா நிறுத்தப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை.

கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரசுக்கு வெற்றிக் கனியைக் கொடுத்த வயநாடு தொகுதியில், பிரியங்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமில்லை.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பற்றி 52 வயதாகும் பிரியங்கா கூறுகையில், ” வயநாட்டில் போட்டியிடுவதில் எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை. வயநாடு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் காந்தி இல்லையே என வயநாடு மக்கள் நினைக்கும்படி விட்டுவிடமாட்டேன். அதேவேளை, நான் ரேபரேலியில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அங்குள்ள மக்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அந்த உறவில் எப்போதும் இடைவெளி ஏற்படாது.” என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வின் மற்ற தலைவர்களின் அதிரடிப் பேச்சுகளுக்கும் அடிக்கடி சவால்விடும்படியாகப் பேசும் தலைவராகவும் தேர்தல் பிரச்சாரத்தில் வல்லவராகவும் இருப்பவர் பிரியங்கா காந்தி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

என்னதான் இருந்தாலும் பேசப்படுவதென்னவோ வாக்கு எண்ணிக்கைதான். அதில் அண்ணன் இராகுல்காந்தியை பிரியங்கா விஞ்சுவாரா என்பதுதான் கேள்வி!

logo
Andhimazhai
www.andhimazhai.com