விண்டோஸ் மென்பொருளுக்கு கண்டம்! என்ன நடந்தது?

கையால் எழுதப்பட்ட  போர்டிங் பாஸ்
கையால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்
Published on

கிரௌட் ஸ்ட்ரைக் ( CrowdStrike) என்ற பெயரை நேற்றுதான் பலரும் கேள்விப்பட்டார்கள். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஓ எஸ் வைத்திருக்கும் கணினிகளுக்கு நேற்று முன் தினம் ஓசைப்படாமல்  வந்து சேர்ந்த அப்டேட், அந்த  கணினிகளின் செயல்பாட்டைத் துண்டித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் வங்கித் துறை, விமானப்போக்குவரத்து போன்றவை பாதிக்கப்பட்டன. ஏராளமான விமானங்கள் நிறுத்தப்பட்டன. பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். இன்றுதான் நிலைமை சரியாகி வருகிறது.

க்ரௌட் ஸ்ட்ரைக் என்பது டெக்சாஸில் உள்ள கணினிப் பாதுகாப்பு நிறுவனம். கிளவுட் தொழில்நுட்பம் மூலம் கணினிகளுக்கு   பாதுகாப்பு வழங்குவது. பெரும்பாலான பார்ச்சூன் 500 நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பாதுகாப்பைத் தான் நம்பிஉள்ளன. மைக்ரோ சாப்டின் விண்டோஸ் மென் பொருளுக்கு அவ்வப்போது அப்டேட்டுகள் வருவதை நாம் பார்த்திருப்போம். இந்த முறையில் க்ரௌட் ஸ்ட்ரைக்கின் பாதுகாப்பு மென்பொருளான பால்கன் என்ற ப்ளாட்பார்ம், இணையத்துடன் இணைக்கப்பட்ட கணினிகளை யாரும் அத்துமீறிவிடாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அப்படி அனுப்பப்பட்ட ஒரு அப்டேட், கணினிகளின் ரெஜிஸ்ட்ரியில் சேர்க்கையில் காணாமல் போய், பெரும் குளறுபடியை உண்டாக்கி விட்டது.  விண்டோஸ் கணினிகளின் ஸ்கிரீனில்  ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத் என்ற எரர் காண்பிக்க ஆரம்பித்துவிட்டது.

” க்ரவுட் ஸ்ட்ரைக் வெளியிட்ட ஒரு அப்டேட் மூலமாக உலக அளவில் ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை சரி செய்ய உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்’ என்று மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாடெல்லா எக்ஸ் தளத்தில் கூறினார்.

கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனத் தலைவர் ஜார்ஜ் கர்ட்ஸ்,” விண்டோஸ் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு அப்டேட்டால் குளறுபடி ஏற்பட்டு விட்டது. மேக், லினக்ஸ் ஓ எஸ் கணிகளுக்கு பிரச்னை ஏதும் இல்லை. இது எந்த விதத்திலும் சைபர் தாக்குதல் என அச்சம் வேண்டியதில்லை. பிரச்னை கண்டறியப்பட்டு தீர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது,’ எனக் கூறினார்.

நீலத்திரை குளறுபடி
நீலத்திரை குளறுபடி

“பெரிய நிறுவனங்களின் கணினிகளுக்கு பாதுகாப்பு அவசியம். எனவே அவை ஆடோமேட்டிக்காக இந்த அப்டேட்டுகளை செயல்படுத்தும் நிலையில் கணினிகளை அமைத்துள்ளன. இதனால் அனைத்துமே பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டன.  நம் வீடுகளில் இருக்கும் சொந்தப் பயன்பாட்டு கணினிகளில் பெரும்பாலும் அப்டேட்டுகள் ஆப் செய்யப்பட்டிருக்கும் . எனவே தனிநபர் கணினிகளில் பெரும்பாலும் ஆபத்து இல்லை.  இந்த குளறுபடியைக் கண்டு பிடித்து அதற்கான பிக்ஸ் செய்துகொண்டுள்ளனர். இப்போதைக்கு அந்த குறிப்பிட்ட கோப்பை அழித்துவிட்டால் கணினி சரியாகி விடும்” என்று நம்மிடம் தெரிவித்தார் கணினி தொழில்நுட்ப வல்லுனரான செல்வ முரளி.

’இன்று அதிகாலை 3 மணி முதல் இந்த பிரச்னை இந்திய விமான நிலையங்களில் சரியாகி விட்டது. நேற்று ஏற்பட்ட பிரச்னைகளை இன்று சரி செய்யும் பணிநடக்கிறது’ என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தாலும் இனி கணினி பயன்பாடு முறைகளில் மேலும் எச்சரிக்கையான நடைமுறைகளுக்கு வழி பிறக்கும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com