வரும் 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது தேசிய விண்வெளி தின விழாவில் இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் பேசியதாவது:
" இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான முதல் தொகுதியைக் கட்டமைக்க ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இது பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
விண்வெளி வீரர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை தங்கி அறிவியல் ஆராய்ச்சி செய்யவும், புவியீர்ப்பு விசையற்ற சூழல் சோதனைகளையும் மேற்கொள்ளவும் இது உதவும்.
இதன் முதல் தொகுதி வருகின்ற 2028ஆம் ஆண்டிற்குள் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முழு விண்வெளி நிலையமும் வரும் 2035-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் விண்வெளித் திட்டம் தொடங்கப்பட்டு 64 ஆண்டுகளான நிலையில், இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது விண்வெளித் தொழில்நுட்பம் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் பொதுமக்களுக்கு நேரடியாகப் பயன்பட்டு வருகிறது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் உட்பட்ட பல்வேறு முக்கிய திட்டங்களில் இஸ்ரோ தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது." என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.