புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

மகளிர் இட ஒதுக்கீடு: சொந்தம் கொண்டாடும் காங்கிரஸ்; மறுக்கும் பா.ஜ.க.!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

முன்னதாக, இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் அலுவலாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ’நாரி சக்திவந்தன் அதினியம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பேசுகையில், இந்த மசோதா ஜனநாயகத்தை வலுப்படுத்தும்; தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் என் வாழ்த்துகள் என்றார்.

மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால், பலவீனமான பெண்களையே அரசியல் கட்சிகள் தேர்வு செய்கின்றன. கல்வியறிவு பெற்றவர்கள், எதிர்த்துப் போராடக்கூடியவர்களை எந்த கட்சியும் தேர்வு செய்வது இல்லை,” என்றார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அனைத்து கட்சிகளுமே திறமையற்ற பெண்களையே தேர்வு செய்கின்றன என அவர் கூறுவதை ஏற்க முடியாது. நாங்கள் அனைவரும், பா.ஜ.க.வால் அதிகாரம் பெற்றுள்ளோம்.” என்றார்.

”மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூற, அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்தார்.

“மகளிர் இடஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும்” தி.மு.க. எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ' இது எங்களுடையது' என பதிலளித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com