இந்திய உச்சநீதிமன்றத்தின் பெயரிலான யூட்டியூப் சேனலை கிரிப்டோ கரன்சி ஆதரவாளர் கும்பல் ஒன்று ஹேக்செய்துவிட்டது.
உச்சநீதிமன்றமானது அரசியல்சாசன அமர்வு, பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை யூட்டியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பிவருகிறது. குறிப்பிட்ட அந்த சேனலின் முகவரிக்குச் சென்றபோது, திடீரென இன்று இன்னொரு பக்கத்துக்கு திசைதிருப்பிவிட்டது.
அது என்னவென்று பார்த்தால், அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் ஊடகப் பரப்பல் பக்கம். அதில், ஆங்கிலத்தில் "Brad Garlinghouse: Ripple Responds To The SEC's $2 Billion Fine! XRP PRICE PREDICTION" எனும் தலைப்பிலான மொட்டையான ஒரு காணொலி இடம்பெற்றிருந்தது. இதில் உள்ள எக்ஸ்ஆர்பி XRP என்பது உலக அளவில் ஏழாவது இடத்தில் உள்ள கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஆகும்.
கிரிப்டோ கரன்சி ஆதரவாளர்கள் அவ்வப்போது இப்படியாக பிரபல இணையதளங்களில் ஊடுருவல்செய்து, குறிப்பிட்ட நேரத்துக்கு தங்களை விளம்பரம் செய்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தின் 22ஆம் தேதியில் CoinDCX எனும் இந்திய கிரிப்டோ கரன்சி பரிமாற்ற அமைப்பின் டுவிட்டர் பக்கத்தை, இதைப்போலவே ஹேக்கர்கள் ஊடுருவல் செய்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.