மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கான மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து இதை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதாக அரசு ஒப்புக்கொண்டது.
மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி, சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி உட்பட பல உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்துப் பேசினார்கள்.
அரசமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்பதை முக்கிய கருத்தாக அவர்கள் எடுத்துவைத்தார்கள்.
தி.மு.க.வின் டி.ஆர். பாலு, இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பக் கோரினார்.
அதை ஏற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
சட்ட அமைச்சர் அர்ஜூன் இராம் மேக்வாலும் மசோதாவைப் பரிசீலனைக்கு அனுப்பப் பரிந்துரை செய்வதாகக் கூறினார்.