தொலைபேசிக் கட்டணத்தை ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியது தெரிந்ததே! 26 சதவீதம்வரை கட்டணம் உயரத்தப்பட்டதால் செல்பேசிப் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார்கள்.
அதுவும் ஜியோ உரிமையாளர் அம்பானியின் மகன் திருமணத்துக்கு இடையில் இப்படியொரு கட்டண உயர்வு அறிவிக்கப்பட... அதையொட்டி சமூக ஊடகங்களில் கேலிகிண்டல்களும் வசைகளும் ஏராளமாகப் பதிவிடப்பட்டன.
இந்த நிலையில், தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வால் அதிகமான அளவில் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இணைப்புக்கு மாறிவருவதாகத் தகவல்கள் வெளியாகின. சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களும் கணிசமான அளவில் பி.எஸ்.என்.எல்.-க்கு மாறிவிட்டதாகப் படங்களுடன் பதிவுகளைப் போட்டுவருகின்றனர். தங்கள் குடும்பத்தினரின் செல்பேசி சேவை நிறுவனத்தை மாற்றியதாகவும் சிலர் குறிப்பிட்டுச் சொல்லிவருகின்றனர்.
இதில் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 80 இலட்சம் பேர் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களின் சேவையிலிருந்து விலகியதாகவும் அவர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிவிட்டதாகவும் நேற்றிலிருந்து தகவல்கள் பரவிவருகின்றன. சமூக ஊடகங்களில் பலரும் இதைப் பகிர்ந்துவருகின்றனர்.
இதன் உண்மைத் தன்மையை அறிய பி.எஸ். என். எல். தரப்பினரிடம் முயன்றோம். அதிகாரபூர்வமாக அப்படியொரு தகவல் இல்லை என்றே பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.எஸ்.என்.எல். பணியாளர் சங்கத்தின் அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பாவிடம் கேட்டதற்கு, ” கடந்த 10 நாள்களாக தனியார் நிறுவனங்களின் சேவையிலிருந்து பி.எஸ்.என்.எல். சேவைக்கு ஏராளமான நுகர்வோர்கள் மாறிவருகின்றனர். அகில இந்திய அளவில் இந்த பத்து நாள்களில் 2 இலட்சம் பேர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியிருப்பது உறுதி. துல்லியமாக எத்தனை பேர் மாறியிருக்கிறார்கள் என்பது மாத இறுதியில்தெரியவரும். கட்டண உயர்வால் மக்கள் கடுமையான அதிருப்தி அடைந்து பொதுத்துறையின் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிவருவது மகிழ்ச்சியானது.” என்று கூறினார்.