
இடதுசாரி முன்னணி ஆளும் கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களைப் பெற்றது, தெரிந்ததே!
இடதுசாரிகள் ஆளும் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் மனநிலை இதில் வெளிப்பட்டுள்ளது என்கிறார்கள், மலையாள தேசத்துக்காரர்கள்.
காங்கிரஸ் கட்சி ஒரு புறம், எஸ்டிபிஐ போன்ற புதிய இசுலாமியக் கட்சிகள் இன்னொரு புறம் என இடதுசாரிகளுக்கு இடர்கள் பல பக்கம் என்பது மட்டும் நிச்சயம். அதற்கான காரணங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சாரங்களில் அடுக்கினார்கள். அது எடுபடவே செய்திருக்கிறது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பரப்பப்பட்ட ஒரு பிரச்சாரப் பாடலுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும்.
ரீல்ஸ் காலகட்டத்தில் மூன்றரை நிமிடப் பாடலை வைத்து அதகளம் செய்துவிட்டார்கள், ஐ.ஜ.முன்னணி தரப்பினர்.
தமிழ்நாட்டைப்போலத்தான் அங்கும் புகழ்பெற்ற சாமிப் பாடல்களில் மெட்டை மாற்றிப்போட்டு பாடுவார்கள். அதாவது, இங்கு வேறு திரைப்படப் பாடல்களின் மெட்டை மாற்றிப்போட்டு சாமிப் பாட்டைப் பாடுவது வழக்கம். அங்கோ, புகழ்பெற்ற ஐயப்பன் பாடல் ஒன்றின் மெட்டில், அதைப் போலவே, சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் திருட்டு தொடர்பாக ஒரு பாடலை வடிவமைத்து உருவாக்கினார்கள். “சுவர்ணம் கட்டவர் ஆரப்பா… சகாக்கள் ஆனே ஐயப்பா…” என விரியும் அந்தப் பாடல், நேரடியாக ஐயப்பன் கோயிலிலிருந்து தங்கத்தைத் திருடியது இடதுசாரிகள்தான் என்று குற்றம் சாட்டியது. ஆனால் இதை நையாண்டியான பாடல் மூலமாகச் சொல்லும்போது பாடலை விரும்பாதவர்கள்கூட காதுகொடுத்துக் கேட்கக்கூடிய அளவுக்கு பாடல் அமைந்துவிட்டது.
அந்த அளவுக்கு பாடலுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. சுமார் 20 இலட்சம் பேர் இந்தப் பாடலைக் கண்டுகேட்டிருக்கிறார்கள்.
1.67 இலட்சம் பேர் விருப்பம் இட்டுள்ளனர்.
1.26 இலட்சம் பேர் பாடலைப் பகிர்ந்துள்ளனர்.
ஆயிரத்து 800 பேர் பாடல் குறித்த பதிவை மறுபதிவு செய்துள்ளனர்.
பன்னிரண்டாயிரம் பேர் இந்தப் பாடலைத் தங்கள் கருவிகளில் சேமித்துவைத்துள்ளனர்.
இப்படி சான்றாதாரமாக பாடலைப் பற்றிய விவரணைகள் கண்முன்னால் வரிசை கட்டுகின்றன.
பிரச்சாரம் தொடங்கும் காலை வேளையிலிருந்து இரவுவரை காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களின் வாகனங்களில் இந்தப் பாடல் ஒலிக்காத வண்டியே இல்லை.
இந்தப் பாடல்தான் ஒரிஜினல் சாமிப் பாடலுக்கு மூலமோ என சந்தேகப்படும் அளவுக்கு இருப்பதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.
இடதுசாரிகளை ஆதரிப்பவர்கள்கூட இந்தப் பாடலின் வரிகள், மெட்டு, இசைக்கோப்பு ஆகியவற்றுக்காகத் திரும்பத் திரும்பக் கேட்டதாக ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் வசிக்கும் ஜிபி சலப்புரம் என்பவர் எழுதிய வரிகளுக்கு அனிபா முடிக்கோடு இசையமைத்துள்ளார். டேனிஷ் படிஞ்சட்டுமுரி என்பவரை வைத்து பாடலைப் பாடவைத்துள்ளார். கோரசுக்கு தன் மகன் இர்பானைப் பயன்படுத்தியுள்ளார்.
பாடலை எழுதியவர் காங்கிரஸ் ஆதரவாளர். பாடல் பதிவின்போது கேரளத்துக்கு வந்திருந்த இவருக்கு, இது இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பது தெரிந்திருக்கவில்லை. கத்தாருக்குத் திரும்பியதும்தான் பாடலை எத்தனையோ இலட்சம் பேர் கண்டுகளித்திருப்பதை அவர் அறிந்துகொண்டார்.
காங்கிரசின் வெற்றிக்கு இந்தப் பாடலும் சமூக ஊடகப் பரப்புரையும் முக்கியமான ஒரு காரணம் என்பதை அரசியல் அறிவியல் ஆய்வாளர்கள் தவறாமல் குறிப்பிடுகின்றனர்.
இங்கேயும் இப்படி ஒரு பாட்டு இதுவரை உண்டா?