சர்ச்சைக்குரிய பெண் சாமியாரும் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யுமான பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகானில் 2008ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை சமயத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 101 பேர் காயமடைந்தனர்.
ரம்ஜான் சமயத்தில் கொடூர குண்டுவெடிப்பை நிகழ்த்தியதன் மூலம் மதக்கலவரத்தை உண்டாக்குவது பின்னணி சதியாகக் கருதப்பட்டது.
பா.ஜ.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், அப்போதைய இராணுவ அதிகாரி லெப்டினண்ட் கர்னல் பிரசாத் புரோகித் உட்பட்ட ஏழு இந்துத்துவ மதவாத பயங்கரவாதிகளே குற்றத்தில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
தொடர்ந்து, 17 ஆண்டுகள் இதுகுறித்த வழக்கு நடைபெற்று வந்தது. இடையில் பிரக்யாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்கும் ஆளானார்.
2011இல் தேசியப் புலனாய்வு முகமை இந்த வழக்கை எடுத்துக்கொண்டது.
குண்டுடன் வெடிக்க வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை வைத்திருந்த கல்சங்க்ரா என்பவர் உட்பட மூவரை மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
கடந்த 2018இல் தொடங்கிய விசாரணை, இந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியன்று முடிவடைந்து, தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டது.
இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் கடைசிவரை குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஏழு பேருக்கும் எதிராக உறுதியாக அரசுத் தரப்பு சான்றை நிரூபிக்கவில்லை எனக் கூறி, அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.