குடியுரிமைத் திருத்தச் சட்டம்- சிஏஏ
குடியுரிமைத் திருத்தச் சட்டம்- சிஏஏ

குடியுரிமைச் சட்டம்- சிஏஏ நடைமுறைக்கு வந்தது- அறிவிக்கை வெளியிட்டது மைய அரசு!

சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம்- சிஏஏ-வுக்கான அறிவிக்கையை மைய உள்துறை அமைச்சகம் இன்று மாலையில் வெளியிட்டது.

இதன்படி, வங்காளதேசம், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் முசுலிம் அல்லாதவர்கள் 2014 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அறிவிக்கை வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், குடியுரிமைத் திருத்தச் சட்டம்- சிஏஏ அறிவிக்கை வெளியிடப்படும் என்று மைய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியன்று இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே குடியரசுத்தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

இதுபற்றிக் கருத்துக்கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், நான்கு ஆண்டுகள் மூன்று மாதங்கள் கழித்து தேர்தலுக்காக குறிப்பாக மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களைக் குறிவைத்து செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com