ஜியோ, ஏர்டெல், விஐ... மீண்டும் கட்டண உயர்வா?- இளைஞர்கள் கோரிக்கை!

ஜியோ, ஏர்டெல், விஐ
ஜியோ, ஏர்டெல், விஐ
Published on

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய தனியார் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் 10 - 12% உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் இணையத்தொடர்பு என்பது அவசியமானதாக ஆகிவிட்டது. கல்வி, வங்கி, சுகாதாரம், வணிகம் ,வேலை, அவசர உதவிகள் ,உணவு உள்ளிட்ட அனைத்தும் தொலைதொடர்பு சேவையைச் சார்ந்துள்ளதாக மாறியுள்ளது.

”இந்நிலையில் இந்த நிறுவனங்கள் தற்போது 1ஜிபி டேட்டா என்ற திட்டத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு ஆரம்ப இணைய பேக்கேஜ் 1.5 ஜிபி டேட்டா என்ற முடிவிற்கு வந்துள்ளது. விலையேற்றத்தை பொறுத்தவரை 30₹ - 50₹ வரை 28 நாட்கள் திட்டத்தில் உயர்வு செய்துள்ளது. தங்களின் அன்றாட பணிகளுக்காக மாதாந்திர திட்டத்தை பயன்படுத்தும் ஏழை,எளிய‌ மக்களின் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இது மாறியுள்ளது.” என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் இருவரும் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், “ 5ஜி சேவைக்கான இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சாதாரன ஏழை எளிய மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது நியாயமற்றது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வாடிக்கையாளர் நலன்களை பாதுகாக்க வேண்டிய ஆணையம் அதனை செய்ய தவறியுள்ளது.

மொத்தமாக 106 கோடி மக்கள் ஜியோ, ஏர்டெல், விஐ வாடிகையாளர்களாக உள்ளனர். இந்தியாவின் பொதுத்துறை நிருவனமான BSNL ஐ வெறும் 5.71 கோடி மக்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்திய அரசு BSNL-ஐ கைவிட்டதுதான், இந்த விலை உயர்வுக்கு ஒரு மிக முக்கிய காரணம்.

ஜியோ நெட்வொர்க் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் தனது சேவையை பல மாதங்கள் முழுமையாக இலவசமாகவும் மற்றும் அடுத்த ஆறு மாத காலத்தில் பிஎஸ்என்எல்-ஐப் போலவே தரமான சேவையை குறைந்த விலையிலும் கொடுத்தது.

1ஜிபி டேட்டா விலையை 300 ரூபாயிலிருந்து 10-20 ரூபாய்க்கு கொண்டு வந்தது, இதனால் பெரும்பகுதி மக்கள் மொபைல் இணையத்தை அதிக அளவில் பயன்படுத்தத் துவங்கினர்.விரைவாகவே ஜியோ பத்து கோடி பயனர்களைப் பெற்றது. ஆனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த பின் படி படியாக விலையை உயர்த்தி கொண்டே வந்துள்ளது.

-பிஎஸ்என்எல்ன் சேவைகள் போதுமானதாக இல்லாததால், மற்ற நிறுவனங்கள் விலையை உயர்த்தி கொண்டே போகிறது, எனவே பொதுத்துறை நிறுவமான பிஎஸ்என்எல்-ஐ ஒன்றிய அரசு அதிகபடியான நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும்

இந்த ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு என்பது பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ,ஏழை, மத்திய தர மக்கள், போட்டி தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள, குடும்பங்களின் மீது அதிகபடியான பாதிப்பை உண்டாக்கும். 4 பேர் கொண்ட இந்திய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சராசரியைக் கணக்கில் கொண்டால் ஒரு குடும்பம் மொபைல் ரீசார்ஜ்க்கு மட்டும் இந்த யுகத்தில் ஆண்டுக்கு சுமார் 12,000 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

இப்படியான முறையில் பல லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டும் அரசு லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ள துறையாக உள்ள தொலைதொடர்பு துறை அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-ஐக் கைவிட்டு தூரத்தில் நிற்பது தனியார் கொள்ளை லாபத்திற்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே இந்த கட்டணமுறைமையை மாற்றுவதற்கான திட்டமிடல்களை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.

இந்த புதிய விலை உயர்வு, என்பது சமூகத்தில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை வலுப்படுத்தி, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மோசமாக்கும்.

எல்லோருக்கும் டிஜிட்டல் இந்தியா என்ற ஒன்றிய அரசின் வாக்குறுதிக்கு இது முற்றிலும் மாறாக உள்ளது. எனவே உயர்த்தப்பட்ட ஜியோ, ஏர்டெல், விஐ மொபைல் கட்டணங்களை திரும்பப் பெற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துவதோடு, ஒன்றிய அரசு பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உரிய நிதியை வழங்கி மேம்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்த விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை கட்டுபடுத்த வேண்டும். குறைந்த விலையில் நிறைவான சேவையை உறுதி செய்ய நிர்பந்திக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான மக்கள் இணைய சேவையை அடைவார்கள். குறிப்பாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐப் பாதுகாக்க அனைத்து வகையான உதவிகளையும் ஒன்றிய அரசு செய்திட வேண்டும்.” என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com