நாடாளுமன்றத்தில் அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நேற்று அந்த வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்தை எதிர்த்து பா.ஜ.க. உறுப்பினர்கள் பிரச்னை செய்தனர்.
எதிரும்புதிருமான இவர்களின் போராட்டத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் பா.ஜ.க. உறுப்பினர்கள் இருவர் காயம் அடைந்ததாக அக்கட்சியினர் காவல்துறையில் புகாரும் அளித்தனர். இராகுல்காந்திதான் தள்ளிவிட்டார் என்றும் கூறினர்.
காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூட்டணி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமித்ஷாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களின் அமளி தொடர்ந்ததால் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவித்தார்.