இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியின், ‘பாஸ்மதி’ என்ற பெயருக்கு பிரத்யேக உரிமை கோரிய இந்தியாவின் வழக்கை ஆஸ்திரேலிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் இருப்பதால், ஆஸ்திரேலியாவிலும் ‘பாஸ்மதி’ என்ற பெயரை இந்தியா சான்றளிக்கப்பட்ட அரிசிக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் அங்கீகரிக்க வேண்டும் என வேளாண் - பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய ஃபெடரல் நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
"பாஸ்மதி அரிசி, இமயமலையின் அடிவாரத்தில் உள்ள இந்தோ-கங்கை சமவெளிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் வட இந்தியா, பாகிஸ்தானின் சில பகுதிகளும் அடங்கும்.
ஆதலால், இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் பாஸ்மதி பயிரிடப்படுவதால், இந்தப் பெயரை ஒரு நாட்டின் பொருளாக மட்டும் கருத முடியாது." என்று ஆஸ்திரேலிய ஃபெடரல் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் வேளாண் - பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மேல்முறையீட்டை ஆஸ்திரேலிய ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாஸ்மதி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ரஞ்சித் சிங் ஜோசன், அண்மையில் வெளியான தீர்ப்பின்படி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆஸ்திரேலிய சந்தையில் இனி பிரத்யேக நிலை இருக்காது என்றும், அண்டை நாடான பாகிஸ்தானின் ஏற்றுமதியாளர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
எனவே, இந்தத் தீர்ப்பு இந்திய பாஸ்மதி ஏற்றுமதியாளர்களுக்கு முக்கியமான வர்த்தகரீதியான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.