மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு அமைப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு அமைப்பு!
Published on

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதற்காக 8ஆவது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுமார் 50 இலட்சம் மத்திய அரசுப் பணியாளர்களும், 65 இலட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கான ஊதிய, ஓய்வூதிய பலன்கள், படிகள் ஆகியவை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரையறுக்கப்படும்.

இதற்காக 1947 முதல் பே கமிசன் எனப்படும் ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடைசியாக 2016ஆம் ஆண்டில் ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த ஊதியக் குழுவை அமைக்க கடந்த ஜனவரியில் மைய அமைச்சரவை அனுமதி அளித்தது. 

இந்த நிலையில், செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குழுவின் விவரத்தை வெளியிட்டார். 

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி இரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான இக்குழுவில், பேராசிரியர் புலக் கோஷ், பங்கஜ் ஜெயின் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்தக் குழு 18 மாதங்களில் தன்னுடைய அறிக்கையை அரசுக்கு அளிக்கும். அதன்படி மைய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

மாநிலங்களிலும் பெரும்பாலானவை மைய அரசின் ஊதிய விகிதத்துக்குச் சமமான அளவுக்கே ஊதியத்தை வழங்கிவருவதைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com