தமிழகத் திட்டங்களுக்குக் காரணமானவர் மன்மோகன் -மு.க.ஸ்டாலின்

தமிழகத் திட்டங்களுக்குக் காரணமானவர் மன்மோகன் -மு.க.ஸ்டாலின்
Published on

மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”பொருளாதார நிபுணர் முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பானது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும்.” என்றார்.

“குறிப்பாக தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் துணை நின்றிருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலே சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, அதேபோல் 100 நாட்கள் வேலைத்திட்டம் என்கின்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களுடைய பல ஆண்டு கால கனவாக இருந்து வந்த தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை அன்னை சோனியா காந்தி அவர்களின் துணையோடு  அறிவித்து நிறைவேற்றித் தந்தவர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களோடு நெருங்கி நட்புணர்வோடு பழகக்கூடியவராக இருந்தவர். அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனைக்குரிய ஒன்று.” என்றும் ஸ்டாலின் கூறினார்.

பத்து ஆண்டுகள் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகமும் அந்தக் கூட்டணியில் இருந்தது; தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நன்மையாக இருந்தது என செய்தியாளர் கேட்டதற்கு,

”இன்றைக்கு மெட்ரோ இரயில் திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவர் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவந்ததற்கும் அவர்தான்  காரணம். அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்கும் அவர் தான் காரணமாக இருந்தார். ஆனால் இடையிலே அத்திட்டம் நின்றுவிட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவற்கு  அவர் தான் காரணமாக இருந்திருக்கிறார்.” என்று ஸ்டாலின் பதில் அளித்தார். 

பின்னர் அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “ இந்தியாவின் தலைசிறந்த மகன்களுள் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்தினேன். வரலாறு அவரை கனிவுடன் நடத்தும் என்பது மட்டுமல்ல, தமது தொலைநோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்த, தமது பணிவால் கோடிக்கணக்காருக்கு ஊக்கமூட்டிய, அடுத்து வரும் தலைமுறைகளுக்கெல்லாம் தமது வாழ்க்கையால் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான கலங்கரை விளக்கமாக விளங்கும் அரிதினும் அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு அவரது பெயரைப் பொறித்து வைக்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com