
இந்தியச் சூழலியல் அறிஞர்களில் ஒருவரும் சூழல் காப்பாளருமான மாதவ் காட்கில் மூப்பு காரணமாக நேற்று புனேவில் காலமானார். அவருக்கு வயது 83.
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் பிறந்த அவர் அடிப்படையில் கல்வி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றியவர். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்து 31 ஆண்டுகள் பணியாற்றினார்.
சூழல் அறிவியலில் கவனம் செலுத்திய அவர், அங்கு சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தை உருவாக்கினார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டபோது, அதற்குத் தலைமைப் பொறுப்பில் செயல்பட்டார்.
2013 ஆகஸ்ட்டில் கோவா மாநிலம் பனாஜியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாப்போம் எனும் மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
அந்த மலையின் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதிலும் முதன்மையான பங்காற்றினார்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்கக் கோரி தமிழகம், கர்நாடகம், கேரளம் மூன்று மாநிலங்களிலும் இடைவிடாமல் தொடர் பணிகளை மேற்கொண்டுவந்தார்.
மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் வல்லுநர் குழுவின் தலைவராக அந்த மலையைப் பாதுகாப்பது எப்படி என தனிச் சிறப்பான அறிக்கை ஒன்றைத் தயாரித்து வழங்கினார்.
அப்பகுதியில் குறிப்பாக எங்கெங்கு கட்டுமானங்களை மேற்கொள்ளலாம், கூடாது என அவர் குறிப்பிட்டிருந்ததை மீறி கட்டப்பட்ட பகுதிகளில், கேரளத்தில் அண்மையில் மிகப் பெரிய பேரிடர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாதவ் காட்கிலின் அந்த அறிக்கையை சுபகுணம் மொழிபெயர்ப்பில் தமிழில் நீர்க்கோபுரம் என்ற தலைப்பில் உயிர் பதிப்பகம் நூலாக வெளியிட்டது. அதைப் பற்றிய விமர்சனம் அந்திமழை இதழில் வெளியானது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.