இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்
Published on

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரை சமன் செய்துள்ளது இந்திய அணி.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3ஆவது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 34 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

4ஆவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இங்கிலாந்தின் பென் டக்கெட்டும், பொறுப்பு கேப்டன் ஆலி போப்பும் பேட்டிங் செய்தனர். அரைசதத்தை கடந்த டக்கெட் 54 ரன்னிலும், ஆலி போப் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த சூழலில் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஹாரி புரூக்கும் கைகோர்த்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினர். ஹாரி புரூக் 111 ரன்களிலும், ஜோ ரூட் 105 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்சில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்ததால் அத்துடன் 4ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 2 ரன்களுடனும், ஜேமி ஓவர்டான் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

ஒற்றைக்கையுடன் கிறிஸ் வோக்

சுமித் 2 ரன்களிலும் ஜோமி ஓவர்டன் 9 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து ஆட வந்த அட்கிசன் நிலைத்து ஆடி அணியை வெற்றிபாதைக்கு அழைத்து வந்தார். அவருடன் ஆடிய டங் ஜோஸ் டங்கு ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்நிலையில் தோள்பட்டை மூட்டுக் காயத்தால் ஆட்டத்தில் இருந்து விலகிய க்றிஸ் வோக் ஒற்றைக்கையில் பேட் பிடித்து ஆட வந்தார்.

இதைத் தொடர்ந்து அடித்தே தீரவேண்டிய நிலையில் அட்கின்ஸன், சிராஜ் பந்து வீச்சில் ஒரு சிக்ஸர் அடித்தார். அது நான்கு ரன்கள் கிடைக்கவேண்டிய பவுண்டரிதான். ஆகாஷ் தீப் அதைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று சிக்ஸருக்குத் தள்ளிவிட்டார். இதனால் வீரர்களிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசியில் இன்னும் ஆறு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அட்கின்ஸன் சிராஜை எதிர்கொண்டு, போல்ட் ஆனார்.

இதைத் தொடர்ந்து இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.

ஆட்ட நாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்: தொடர் நாயகன்கள்: சுப்மன் கில், ஹாரி ப்ரூக்

logo
Andhimazhai
www.andhimazhai.com