இட ஒதுக்கீட்டால் தரம் தாழ்கிறதா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வைரல் பேச்சு!
இட ஒதுக்கீட்டால் தரம் தாழ்கிறதா என்ற வாதத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய உதாரணம் பரவலான பாராட்டை பெற்று வருகிறது. இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தர்ராஜன் கல்லூரியில் நடைபெற்ற அரசியலமைப்பு தினக் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசியவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டம். 75 ஆண்டுகளாக இந்த அரசியலமைப்புச் சட்டத்தை வைத்து நாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இது பெருமைக்குரியது. ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்புச் சட்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் ஒன்று இல்லையென்றால், நம் இந்தியன் என்ற அடையாளத்தையே இழந்து விடுவோம். ஒரு அரசியலமைப்புச் சட்டம் 16 ஆண்டுகள் தான் நீடிக்கும் என அமெரிக்கா நடத்திய ஆய்வில் தெரியவந்தது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகள் இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் இருக்கும்.
இன்னும் கூட ஜாதி என்னும் சாத்தான் நம் மண்டையில் இருந்து ஆட்டிப்படைத்து வருகிறது. ஆனால் அது எல்லாம் முறியடித்து உரிமை குறித்து பேசுகிறோம் என்றால், அந்த உரிமையைக் கொடுத்தது அரசமைப்புச் சட்டம் தான். அடிப்படைக் கல்வி தேவை என்பதை அரசியலமைப்புச் சட்டத்தில் எடுத்து வந்தார்கள். எமர்ஜென்சி காலகட்டத்தில் நம் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றங்கள் தான் உரிமைகளைப் பாதுகாத்தது. ஒரு காலத்தில் இந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, புதிதாக ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சிகளும் நடந்தது. அதை முறியடித்ததும் நீதிமன்றம் தான்.
சமுதாயத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக தவறான புரிதல் காணப்படுகிறது. அதாவது தேர்வில் 95 மதிப்பெண்கள் பெற்ற ஒருவர் 70 மதிப்பெண்களைப் பெற்ற ஒருவரை பார்த்து, இட ஒதுக்கீடை காரணம் காட்டி தனது உரிமைகளை அவர் பறித்து விட்டதாக கூறுகிறார். ஆனால் 70 மதிப்பெண்கள் எடுத்தவர் ஒற்றைக் காலில் ஓடியதையும், 95 மதிப்பெண்கள் பெற்றவர் இரண்டு காலில் ஓடியதையும் குறிப்பிட வேண்டும்.
இரண்டு காலில் ஓடி முதலில் வருவது முக்கியமல்ல. ஒற்றைக் காலில் ஓடி இலக்கை அடைவது தான் சாதனை. அந்த வகையில் வெறும் 50 மீட்டர் தொலைவிலேயே வெற்றி நிர்ணயிக்கப்படுவதாக கூறுவது தவறு. ஒற்றைக்காலில் ஓடியவர் 2 காலிலும் ஓடும் வரை ரிசர்வேஷனை சமூகத்தில் இருந்து எடுக்க முடியாது.
இட ஒதுக்கீடு மூலம் தரம் கெடுகிறது என்ற வாதத்தை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. இட ஒதுக்கீடு மூலம் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றனர். அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தை சேர்ந்த நபர்கள் பிரம்மாண்ட சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த சாதனைகள் அனைத்தும் இட ஒதுக்கீடு காரணமாகத் தான் சாத்தியமாகின. இது போன்ற நபர்களை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன். இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால், அவர்களது குடும்பம் தரையோடு தரையாகி விடும். இது போன்ற வழக்குகளை நான் தினந்தோறும் சந்தித்து வருகிறேன்.
இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் தரம் கெடுகிறது என்ற வாதத்தை நான் மறுக்கிறேன். அப்படி எல்லாம் இல்லவே இல்லை. இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திப்பது வேறு, நாங்கள் சந்திப்பது வேறு. ஒரு நீதிபதி என்ற முறையில் நாங்கள் இதுபோன்ற விவகாரங்களை அடிக்கடி சந்திக்கிறோம்.
10 பேர் முன்னேறினால் நாடு முன்னேறி விட்டதாக அர்த்தம் கிடையாது. சமுதாயத்தில் உள்ள அனைவரும் முன்னேற வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். அந்த வகையில் அனைவரும் முன்னேற வேண்டும் என்பதுதான் இட ஒதுக்கீட்டின் நோக்கம்." என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.