சிவகாசி நவீன கொலைக்களமா…?

பட்டாசு ஆலை வெடிவிபத்து
பட்டாசு ஆலை வெடிவிபத்து
Published on

பட்டாசு ஆலைகளில் விபத்து தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்தால்தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள்; பட்டாசு தொழிலில் ஆபத்தான வெடி மருந்து பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் உண்டு. பொதுவாக பத்துக்கு பத்து அறையில் 4 வாசல்கள் அமைத்து 4 பேர் மட்டுமே பணி புரிய வேண்டும்.

இந்த சிறிய அறைகளை 10 லட்சம் வரையில் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்யும் சிறிய தொழில் முனைவோரால் குத்தகைக்கு கொடுத்த பத்து லட்சத்தை எப்படியாவது திரும்ப எடுத்தாக வேண்டும் என்பதால் விதிமுறைகளை மீறி பயிற்சி அற்றவர்களையும், 4 பேர் பணிபுரிய வேண்டிய அறையில் 20 பேர் வரையும் இத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். பயிற்சி அற்றவர்கள் செய்யும் தவறுகளும், சிறிய அறைகளில் பன்மடங்கு பணியாளர்கள் பணி செய்வதும் எளிதாக விபத்து ஏற்படுவதற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த வாரம் சின்னக் காமன்பட்டியில் ஏற்பட்ட விபத்தில் பத்து பேர் உயிரிழந்தனர்; இன்று ஏற்பட்ட விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள 32 அறைகள் தரைமட்டமாகி உள்ளன; ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடக்கிறது; அதனால் உயிரிழப்புகள் தொடர் நிகழ்வுகள் ஆகின்றன. இதனால் சிவகாசி நவீன கொலைக்களமா? என்ற கேள்வி எழுகிறது. பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வரையிலும் முறையான இழப்பீடுகள் வழங்கப்படாமல் பல இழுத்தடிப்புகளுக்கு பிறகு ஒரு சில லட்சங்கள் பெறுவதே மிக கடினமாக உள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் பட்டாசு ஆலைகள் உண்டு. அந்நாடுகளில் சட்ட விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதால் விபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. ஆனால், நமது தேசத்தில் தொழிலாளர்களை பாதுகாக்க விதிமுறைகளை அமலாக்க வேண்டிய மத்திய, மாநில அரசு துறை அதிகாரிகள் ஊழலில் ஊறி திளைப்பதால் முறையான கண்காணிப்புகள் இல்லாமல் போய் விடுகின்றன.

எனவே இனிமேல் இது போன்ற விபத்துக்களை தடுக்க விதிமுறைகள் அமலாக்காத அதிகாரிகளை பொறுப்பாக்கி, கைது செய்து தண்டிக்கப்பட்டால் தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள்; பட்டாசு தொழில்களும் பாதுகாக்கப்படும். இன்று பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பால குரு சாமி என்பவரின் குடும்பத்திற்கு குறைந்தது ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com