ஏங்க....மக்களிடையே புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு இவ்வளவாங்க? -மத்திய அரசு அளித்த பதில்!

ஏங்க....மக்களிடையே புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு இவ்வளவாங்க?
-மத்திய அரசு அளித்த பதில்!
Published on

நாட்டில்புழக்கத்தில் உள்ள கரன்சியின் மதிப்பு தற்போது ரூ. 38,20,866 கோடியாக உள்ளது. இதில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், டிஜிட்டல் ரூபாய் மற்றும் நாணயங்களும் அடங்கும் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்திரி கூறி உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜூலை - 22) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திமுக எம்.பி. கிரிராஜன் மாநிலங்களவையில் பணப்புழக்கம் தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கு ஐந்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.

கிரிராஜன் எம்.பி.
கிரிராஜன் எம்.பி.

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்துள்ளார். அதில்

’’நிதியமைப்பை மேலும் வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் நோக்கில், இந்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பதற்கும், 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம், 1962ஆம் ஆண்டு வருமான வரி விதிகள் மற்றும் 2007ஆம் ஆண்டு பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்துள்ளதோடு, புதிய விதிமுறைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூன் 27, 2025 அன்று முடிவடைந்த வாரத்தின் நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள கரன்சியின் மதிப்பு ரூ. 38,20,866 கோடியாக உள்ளது. இதில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், டிஜிட்டல் ரூபாய் மற்றும் நாணயங்களும் அடங்கும்.

ஆர்பிஐயால் வழங்கப்படும் கரன்சியின் அளவு, பொதுமக்கள் மற்றும் பொருளாதாரத்தின் தேவையைப் பொறுத்தது. மேலும், கரன்சிக்கான தேவை பொருளாதார வளர்ச்சி மற்றும் வட்டி விகிதங்கள் போன்ற பல்வேறு பெருளாதார காரணிகளைச் சார்ந்துள்ளது.

குறைந்த மதிப்புள்ள ரூ.10, ரூ. 20 நோட்டுகளுக்கான பணத் தேவை, நோட்டுகள் மற்றும் நாணயங்களின் கலவையின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது, பொதுமக்களின் பரிவர்த்தனைத் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான மதிப்பு நோட்டு கலவையை பராமரிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இந்திய அரசாங்கத்தால் முடிவு செய்யப்படுகிறது'' எனக்கூறி உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com