முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 6 முறை தொலைப்பேசியில் அழைத்த போதும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்த நிலையில், ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் பிரதமர் மோடியுடான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று நயினார் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை.
நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு ஜூலை 24 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம்.” என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்த கடிதம் என்னிடம் வந்து சேரவில்லை. ஒருவேளை கடிதம் வந்து சேர்ந்தால் கண்டிப்பாக எடுத்துக் காட்டுகிறேன். அப்போது யார் உண்மை சொல்கிறார், யார் பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் திடீரென முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துப் பேசிவிட முடியாது.
அதனால் ஏற்கனவே தொடர்பு இருந்திருந்தால் மட்டுமே இப்படியான முடிவை எடுத்திருக்க முடியும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. அதனால் ஓபிஎஸ் தரப்பைக் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஓபிஎஸ் முடிவு எடுத்ததற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். அவ்வளவுதான்.
என்னை 6 முறை தொலைப்பேசியில் அழைக்கவில்லை. அவர் சொல்லுவது மட்டுமே ஆதாரமாக இருக்கும்.
அவரிடம் வேறு ஆதாரம் இருக்காது. நான்தான் அவரை தொடர்பு கொண்டேன். ஸ்டாலினை சந்திப்பதற்கு முதல் நாள் அவரை அழைத்தேன். அதேபோல் சட்டசபை நடக்கும் போதும் பலமுறை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறோம். ஆனால் இம்முறை எனது உதவியாளர்கள் யாரும் ஓபிஎஸ் அழைத்ததாகச் சொல்லவில்லை. இதனை ஒரு குறையாக ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார். ஆனால் நான் அவரைப் பற்றி குறையாகச் சொல்ல மாட்டேன்.” என்றார்.