தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

இந்துக்களுக்கு எதிரானது என்று திரிப்பதா? – திருமா அதிர்ச்சி!

சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசியது இந்துக்களுக்கு எதிரானதைப்போல அமித்ஷா போன்றவர்கள் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “அண்மையில் தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன். அதில் அமைச்சர் உதயநிதியும் கலந்து கொண்டு பேசினார். தொற்று நோய்களை ஒழிப்பது போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார். அதை அகில இந்திய பிரச்னையாக மாற்றியிருக்கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பேசும் நிலை உருவாகியுள்ளது. இது அதிர்ச்சியை அளிக்கிறது. சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கோட்பாட்டை, கருத்தியலை எதிர்த்துப் பேசுகிற ஒன்றாகும். அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிரானது என்பது போன்ற திரிபுவாதத்தை பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக உள்ளது.” என்று கூறினார்.

“சனாதனம் சமத்துவத்துக்கு எதிரானது என்பதால்தான் அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதை அமைச்சர்களே இன்னும் புரிந்து கொள்ளாமல், தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக விமர்சனம் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இதை விசிக கண்டிக்கிறது.” என்றவரிடம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அதிமுக ஆதரித்துள்ளதே என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்,“அதிமுக-விற்கு வேறு வழி இல்லை. பாஜக எந்த முடிவு எடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கின்ற நெருக்கடிக்கு அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com