பதினைந்து மாதங்களாக பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரானது ஒருவழியாக தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி முதல் அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு இரு தரப்புகளும் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
கத்தார், எகிப்து, அமெரிக்க அரசுகள் மேற்கொண்ட முயற்சியில் இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரகுமான் பின் ஜாசிம் அல் தனி இந்திய நேரப்படி நேற்று இத்தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதன்படி, ஆறு வாரங்களில் பிணையக் கைதிகளை ஹமாஸ் இயக்கத்தினர் விடுவிக்க வேண்டும்; அதே காலகட்டத்தில் இஸ்ரேல் தன்னுடைய படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்; குறிப்பாக, பிலடெல்பி பகுதியிலிருந்து 50 நாள்களில் இஸ்ரேல் படைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, மருந்துப் பொருள்கள் அனுப்புவதற்காக காசாவுக்கு அன்றாடம் 600 சுமைவண்டிகளாவது அனுமதிக்கப்பட வேண்டும் என ஐ.நா. உதவி அமைப்பு கூறியுள்ளது.