செந்தில் பாலாஜி - சென்னை உயர்நீதிமன்றம்
செந்தில் பாலாஜி - சென்னை உயர்நீதிமன்றம்

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல! - நீதிமன்றம்

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின் துறை இல்லாத அமைச்சராக நீடித்துவருகிறார். அதற்கான உத்தரவை எதிர்த்தும், அவரைப் பதவி நீக்கம் செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும் தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல், எந்த தகுதியின் அடிப்படையில் துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார் என விளக்கம் அளிக்க ஆளுநர் மாளிகைக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிடக்கோரி சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவா்த்தன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதிகள் கங்கா புா்வாலா, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் ஜூலை 28- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்கள் கடந்த ஆகஸ்ட்-4 தாக்கல் செய்யப்பட்டன.

இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

”ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர் அமைச்சரவையில் இடம்பெறுவது தார்மீக ரீதியானது இல்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து தற்போது எந்த உத்தரவையும் பிறபிக்க முடியாது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறி இந்த வழக்குகளை முடித்துவைத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com