“சென்னையில் ஐ.டி. ரெய்டு நடக்கும் உணவகத்துக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை. அந்த உணவகத்தின் உரிமையாளர் வேறு ஒருவர்” என நடிகர் ஆரியா கூறியுள்ளார். தற்போது அவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பை விடவும் தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. நடிகர் ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் சீ ஷெல் என்ற பெயரில் ஏராளமான உணவகங்கள் இயங்கி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள சீ ஷெல் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் நடிகர் ஆர்யா மீது புகார் எழுந்ததால், இந்த சோதனை நடந்து வருவதாக சொல்லப்பட்டது.
சென்னை அண்ணாநகர், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு ஆர்யா அளித்த பேட்டியில் “சென்னையில் ஐ டி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை. அந்த ஹோட்டல் உரிமையாளர் வேறு ஒருவர்.” என்று தெரிவித்தார்.
தற்போது, சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.