ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவுக்கு சிறை தண்டனை!

பிரதீப் யாதவ் ஐஏஎஸ்
பிரதீப் யாதவ் ஐஏஎஸ்
Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இருவருக்கு தலா 2 வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர், பணப் பலன்கள் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கடந்த 2019இல் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோரி 2020இல் ஞானபிரகாசம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம், அப்போதைய கல்வித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் (தற்போது இவர் நெடுஞ்சாலைத்துறை உயர் செயலாளராக உள்ளார்) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவாநாந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாதது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு காரணமான அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அதிகாரி செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆன்டோ ஆகிய 3 பேருக்கும் 2 வாரம் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக மூன்று நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள் 3 பேரும் வரும் 9ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக மதுரை உயர் நீதிமன்ற பதிவாளர் முன்பு சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com