”முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் சிரிப்பு போலீஸ் போன்று சிரிப்பு அரசியல்வாதிகள்.’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் இதயத்தில் இருந்த மனச்சுமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய கருத்து உணர்வுப்பூர்வமானது. மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அதிமுக எடுத்த அத்தனை முடிவுகளிலும் விசுவாசமாக இருந்தவர். ஜெயலலிதா கொடுத்த பணிகளுக்காக நானும், அவரும் தமிழகத்தில் முழுவதும் பயணித்துள்ளோம். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான அவரை நான் நன்கு அறிவேன். அந்த வகையில் கட்சிக்காக விருப்பு, வெறுப்பு இல்லாமல் பணியாற்றக் கூடிய நல்ல தலைவர் செங்கோடையன்.
அதிமுக பிரிந்து மீண்டும் ஒன்றாக இணையும்போது, எடப்பாடி பழனிசாமி ஆதவாளர்கள்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினார்கள். மீண்டும் அவர்களே ஒற்றைத் தலைமை வேண்டுமென்று பலவந்தமாக அதை கொண்டு வந்தனர். அதற்கு அவர்கள் சொல்லிய காரணம் எடப்பாடி பழனிசாமியின்கீழ் ஒற்றைத் தலைமையாக செயல்பட்டால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றனர். ஆனால், என்ன ஆனது? எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி, சட்டப் பேரவை, மக்களவை என அனைத்து தேர்தலில்களிலும் அதிமுக தோல்விதான் அடைந்துள்ளது.
அதிமுக தொண்டர்கள் தற்போது மிகப்பெரிய மன வருத்தத்தில் உள்ளனர். இணைந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு என்ற நிலையில் அதிமுக உள்ளது. அதிமுக-வின் அடிப்படைக் கொள்ளை இருமொழிக் கொள்கைதான். மத்திய அரசு அனைத்து மாநிலத்துக்கும் நிதியை பரவலாக கொடுத்துதான் வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணியை அமைத்துவிட்டு நான்கு நாள்களில் அக்கூட்டணியில் இருந்து விலகினார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான விளைவை அதிமுக இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் சிரிப்பு போலீஸ் போன்று சிரிப்பு அரசியல்வாதிகள்" என்றார்.