முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நேற்றுமுன் (பிப்.10) தினம் சந்தித்துப் பேசினார். 15 நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பில் திருமாவளவன் வைத்த 4 கோரிக்கைகளோடு, சந்திப்பு தொடர்பான புகைப்படமும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து, உதயநிதிக்கும் திருமாவுக்கும் இடையே உள்ள ‘இடைவெளி ஏன்’ என கேள்வி எழுப்பியதோடு, பெரியார் படத்தை வைத்துக் கொண்டே இந்த இடைவெளியைக் கடைபிடிப்பது ஏன் என்ற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில்சொல்லும் விதமாக வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க. அமைச்சர்கள் குனிந்து வணங்குவது போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்து, “மதிப்புமிகு ஜெயக்குமார் அண்ணன் அவர்களே நீங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் முன் என்றைக்காவது இப்படி சமமாக அமர்ந்ததுண்டா? அதுவெல்லாம் ஒரு ‘கார்’காலம்.
இன்றைய தலைவர் எடப்பாடியார் அவர்களோ அல்லது நீங்களோ இப்படி சமமாக அமர்ந்த புகைப்படங்களைப் பகிரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டு, “அன்பிற்கினிய தம்பி வன்னியரசு அவர்களே... இதோ நீங்கள் கேட்ட புகைப்படங்கள்!
திருமாவளவனின் அரசியல் அனுபவத்திலும்-பொதுவாழ்வால் அவருக்கு வந்த நெருக்கடிகளிலும் சிறிய பகுதியைக்கூட தன் வாழ்வில் உதயநிதி பார்த்திருக்க மாட்டார்.
கல்லூரிக் காலம் முதல் திருமாவளவனைப் பார்த்தவன் என்ற முறையில் இந்த கேள்வியை எழுப்பினேன்!
விடுதலை சிறுத்தைகளே விரும்பாத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வரும் திமுக அரசை நோக்கி உங்கள் கேள்வி எழுப்புங்கள்!
அதைத்தான் உங்கள் தொண்டர்களும் விரும்புவார்கள்!
மாறாக உதயநிதி போன்ற மன்னர் பரம்பரையின் வாரிசிற்காக எங்களை நோக்கி வசைபாட வேண்டாம்!” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சர் இராஜகண்ணப்பனைத் திருமாவளன் சந்திக்கச் சென்றபோது அவருக்கு பிளாஸ்டிக் நாற்காலி வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தற்போது அதேபோன்றதொரு சர்ச்சை எழுந்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.