ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிபிஐ வழக்குப் பதிவை வரவேற்றுள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர், தீபாவளி இனிப்பு, C/F நியமனம், முறைகேடான பணி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை மூடி மறைக்கும் பால்வளத்துறை, ஆவின் அதிகாரிகள் மீதும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்தவா் எஸ்.ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவின் கிளை மேலாளா் வேலை பெற்றுத் தர ரூ. 30 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது விருதுகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடா்பாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னா் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தேபோல, ராஜேந்திர பாலாஜி சுமாா் 33 பேரிடம் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ரவீந்திரன் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
காவல்துறை தரப்பில் முறையாக பதிலளிக்கப்படாததால், காவல்துறையின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி கடந்த மாதம் இந்த வழக்கை இனி சிபிஐ விசாரிக்கட்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு சிபிஐ அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன், விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.