பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேரில் அழைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. கட்சியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் வரும் சூழலில், பாமகவின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது.
இது ராமதாஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ராமதாசுக்கு போட்டியாக வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பா.ம.க. தலைவர் பதவி வகித்த அன்புமணி எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுகிறார். இதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. அவர் பதவி கடந்த மே மாதமே காலாவதியாகி விட்டது. எனவே, சட்டவிரோதமாக அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் அருள் ஆஜராகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இந்த மனு மீது தீர்ப்பு வழங்க 10 நிமிடம் போதும். ஆனால் அவ்வாறு செய்ய நான் விரும்பவில்லை, ராமதாசையும், அன்புமணியையும் இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் வரச் சொல்லுங்கள். இருவரிடமும் தனித்தனியாக பேச விரும்புகிறேன். அவர்களிடம் நேரிடையாக பேச விரும்புகிறேன். இந்த விசாரணை என்னுடைய சேம்பரில் நடக்கும். அப்போது வழக்கறிஞர், பா.ம.கவினர் என்று யாருக்கும் அனுமதி கிடையாது” என்றார்.
அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “அன்புமணிக்கு தகவல் தெரிவித்து அவரை வரச்சொல்லுகிறேன். அவர் 5.30 மணிக்கு வந்து விடுவார்” என்றார். வழக்கறிஞர் அருள் கூறுகையில், “ராமதாசுக்கு தகவல் தெரிவித்து விடுகிறேன். அவர் நீண்ட தூரத்தில் இருந்து வர வேண்டும்” என்றார். அதற்கு நீதிபதி, “இப்போது (12.50 மணிக்கு) புறப்பட்டால், மாலைக்குள் வந்து விடலாம்” என்றார். இதையடுத்து வழக்கை மாலை விசாரிப்பதாக கூறி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.