பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானுக்கும் இடையே குடும்ப சண்டை இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அதை இமானுவேல் மேக்ரான் மறுத்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (47) தனது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் (72) சிறப்பு விமானத்தில் வியட்நாமுக்கு சென்றார். விமானம் அந்நாட்டின் தலைநகரான ஹனோயில் தரையிறங்கியது. அப்போது, இமானுவேல் மேக்ரான் வெளியே வர தயாராக இருந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக அவரது கன்னத்தில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவில், பிரிஜிட்டின் முகம் தெரியவில்லை. விமானத்தில் கதவுகள் அதனை மறைத்துள்ள நிலையில், அவரது கை ஆக்ரோஷமாக இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைவது போல் அந்த வீடியோ உள்ளது.
மேலும், இமானுவேல் மேக்ரான் அதனை வெளிக்காட்டாமல், வெளியே உள்ளவர்களை நோக்கி கையை அசைக்கிறார். பின்னர், இருவரும் கீழே இறங்கி வந்தபோது பிரிஜிட் தன்னுடைய கணவரின் கையை பிடிக்கவில்லை.
இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவியதோடு, அதிபருக்கும் அவரின் மனைவிக்கும் குடும்பத்தகராறு என செய்தகள்ி வெளியாகின.
உடனே இதற்கு, பிரான்ஸ் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி அரண்மனை சார்பில் தந்த விளக்கத்தில், ‛‛கணவரும், மனைவியும் நீண்ட பயணத்தை தொடங்குகின்றனர். இது செல்ல சண்டை'' என்று கூறப்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேக்ரான், இந்த சம்பவம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“நானும் என் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம் அல்லது கிண்டல் செய்து கொண்டிருந்தோம். இதில் ஒன்றுமில்லை.” என விளக்கம் கொடுத்திருக்கிறார் மேக்ரான்.