அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் சிலை
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் சிலை

கள்ளக்குறிச்சி முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட முருகன் சிலை அமெரிக்க காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூா் கிராமத்தில் மிகவும் பழைமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் என்ற சிவன் கோயில் உள்ளது. மாலிக்காபூா் படையெடுப்பின்போது இந்தக் கோயில் சிதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு இந்தக் கோயில் பராமரிப்பின்றி கிடந்துள்ளது. கடந்த 1998-ஆம் ஆண்டு அந்தப் பகுதி மக்கள், கோயிலைப் புனரமைத்து, மண்ணில் புதைந்திருந்த பிரம்மா, முருகன், சண்டிகேஸ்வரா் உள்பட்ட 13 கற்சிலைகளைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு இந்தக் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த தொன்மையான முருகன் சிலையைத் திருடிச் சென்றனர்.

இந்த சிலைத் திருட்டு குறித்து முதலில் ஊர் மக்கள் புகார் எதுவும் அளிக்கவில்லை. தற்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தொன்மையான பல சிலைகளை மீட்டு வருவதால், முருகன் சிலை காணாமல் போனது குறித்து தச்சூா் மக்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் அண்மையில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், அந்தச் சிலை அமெரிக்க நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தச் சிலையை மீட்டு தமிழகத்துக்குக் கொண்டுவர சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com