தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்! -நீதிமன்றத்தில் கமல் வழக்கு!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

கர்நாடக மாநிலத்தில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் மட்டும் தொடங்கவில்லை.

முன்னதாக நடந்த 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து பிறந்ததே கன்னட மொழி என்று கமல்ஹாசன் பேசி இருந்த நிலையில், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கடந்த 31ஆம் தேதி "தக் லைப்" படத்திற்கு தடை விதிப்பதாக தெரிவித்தது. இதற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்த மனுவில், கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும், திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் கமல்ஹாசன் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com