புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.வெங்கடேச மூர்த்தி காலமானார் !

புகழ்பெற்ற கன்னட  எழுத்தாளர் ஹெச்.எஸ்.வெங்கடேச மூர்த்தி காலமானார் !
Published on

புகழ்பெற்ற கன்னட பேராசிரியரும் எழுத்தாளருமான ஹெச் எஸ் வெங்கடேச மூர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை காலை, வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நல குறைவினால் தனது 80 ஆவது வயதில் காலமானார்.

இவர் 1944 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள சன்னகிரி மாவட்டத்தில் ஹொடிகரே என்ற குக்கிராமத்தில் பிறந்தார். பெங்களூரு மத்திய கல்லூரியில் கன்னடத்தில் முதுகலை பட்டமும், கன்னட இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். கன்னட நவீன இலக்கிய இயக்கமான நவ்யா இயக்கத்தை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் கே.எஸ் நிசார் அகமதுவை தனது ‘கவிதை குரு’ என்று ஹெச்.எஸ்.வி குறிப்பிட்டார்.

இவர் தனது இலக்கியப் பயணத்தை’ பரிவ்ருதா’ என்ற கவிதை தொகுப்போடு தொடங்கினார். இவரின் சில கதைகள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. இவரின் ‘சின்னாரி முத்தா’ என்ற கன்னட படம் தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளது. மத்திய சாகித்திய அகாதமி, கர்நாடக சாகித்திய அகாடமி, சிறந்த பாடலுக்கான 66-வது ஃபிலிம்ஃபேர் தென் விருது, ராஜ்யோத்கவா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். கலபுரகியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த 85 ஆவது கன்னட இலக்கிய மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். இவரின் மறைவு கன்னட உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

ஹெச்.எஸ் வெங்கடேச மூர்த்தியின் உடல் அரசு மரியாதையுடன் பெங்களூருவில் தகனம் செய்யப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com