கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தலித் சமுதாயத்தைச்சேர்ந்த முருகேசன் என்பவர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த கண்ணகி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதைப் பிடிக்காத கண்ணகியின் உறவினர்கள் இருவரையும் கொலை செய்து எரித்துவிட்டனர்.
பல்வேறு கட்சிகளின் அழுத்தத்துக்கு பிறகு இந்த ஆணவக்கொலை தொடர்பான வழக்கு 2004ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், அப்போதைய விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது.
கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு தூக்கு தண்டனையும், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெகடர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.