நான்கு நாள்கள் அரசு விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதையடுத்து இன்று முதல் குணா குகை முதலிய பல சுற்றுலா மையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானலில் பல சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. வனப் பகுதியில் இருக்கும் மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடு, தூண் பாறை ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் விரும்பத்தக்க இடங்களாகும். ஆனால் வந்துசெல்லும் பயணிகளுக்கு ஏற்ப வசதிகள் இல்லை என்பது பெரும் குறையாக இருந்துவருகிறது.
குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான அளவுக்கு வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனால் பயணிகள் தங்களின் வாகனங்களை ஆங்காங்கே சாலையோரமாக நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் விடுமுறை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் நேர்கின்றன.
நேற்று நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டக் குழுவினரின் வண்டி மீது, விழுப்புரம் சுற்றுலா வண்டி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் படுகாயம் அடைந்தனர். 20 பேர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும் 5 பேர் கானா விலக்கு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை முதலிய சுற்றுலா மையங்களுக்கு பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.