“ஆராய்ச்சி பூர்வமாக கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆயுர்வேதத்தில், கோமியத்தை அமிர்த நீர் என குறிப்பிடுகிறார்கள்.” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ''அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தபோது ஒரு சன்னியாசி கூறியதாக கோமியத்தைக் குடித்ததால், 15 நிமிடங்களில் ஜுரம் போனதாக'' தெரிவித்தார். நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனம் ஒன்றின் இயக்குநர், இதுபோன்று அறிவியல் பூர்வமாக ஆதாரமற்ற தகவல்களை கூறுவதா? என கேள்வி எழுப்பி பலரும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோமியம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஐஐடி இயக்குநர் காமகோடி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதற்கு என்னிடம் அறிவியல்பூர்வ ஆதாரம் உள்ளது. நானும் பஞ்சகவ்யம் அருந்துகிறேன். இந்த விவாதத்தை நேர்மறையாகப் பார்க்கிறேன். இதுகுறித்து ஐஐடி பேராசிரியர்கள் விரும்பினால், சென்னை ஐஐடியிலேயே ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆராய்ச்சி பூர்வமாக கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதனால் தான், வீட்டிற்கு முன்பு அதனைத் தெளிப்பார்கள். ஆயுர்வேதத்தில், கோமியத்தை அமிர்த நீர் என குறிப்பிடுகிறார்கள். ஆயுர்வேதத்தில் அதனை மருந்து என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா? அப்போ மாட்டு சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் மாட்டு கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்.
மியான்மர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதனை எடுத்துக்கொள்கிறார்கள். எனவே இதனை ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ள முடியாது. இது ஆயுர்வேதத்தில் மருந்து என சொல்லப்பட்டுள்ளது. 80 வகையான நோய்களுக்கு கோமியத்தைப் பயன்படுத்தலாம் என ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவர் (காமகோடி) சொன்ன காய்ச்சல் அந்த 80 வகையான நோய்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.
அறிவுபூர்வமாக, விஞ்ஞானபூர்வமாக ஒரு தொழில்நுட்ப கல்லூரியைத் தலைமை தாங்குபவர் சும்மா சொல்வாரா என்பதே என் கேள்வி” என்றார்.