இயற்கை வளத்தை பங்குபோட்டுக் கொள்ளையடிக்கும் அரசு – கார்ப்பரேட் கூட்டின் சதிவலையில் சிக்கி, அதை அம்பலப்படுத்தும் ஒருவனின் கதையே இந்த குபேரா.
நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு வங்கக்கடலில் இருந்து கச்சா எண்ணெயைக் கண்டுபிடிக்கிறது அரசு. அதை சட்டவிரோதமாக கைப்பற்ற நினைக்கிறார் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான ஜிம் சர்ப் (நீரஜ் மித்ரா). அதற்காக முக்கிய அமைச்சர்களுக்கு ஒரு லட்சம் கோடியை தருவதாக உறுதியளிக்கிறார். இதை செய்து முடிக்க, சிறையில் இருக்கும் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான நாகார்ஜுனாவை (தேவா) வெளியே எடுக்கிறார்கள். அவர் கொடுக்கும் ஐடியாவின்படி, நான்கு பிச்சைக்காரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதிலொருவர் தனுஷ். இந்த நால்வரை வைத்து, கோடிகளை எப்படி கைமாற்றுகிறார்கள்? இதில் தனுஷ் என்ன செய்கிறார்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது படத்தின் மீதி கதை.
ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், படம் தொடங்கியதுமே வரும் கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு, மத்திய அமைச்சருடன் தொழிலதிபர் போடும் டீல் போன்ற விஷயங்கள் படத்தின் மீதான கவனத்தைக் குவிக்க வைக்கிறது. முதல் பாதி, ஆர்ப்பாட்டம் இல்லாத நிதானமான திரைக்கதை. ஆனால், இரண்டாம் பாதி திரைக்கதை எங்கே செல்கிறது என்று இயக்குநருக்கும் தெரியவில்லை. பார்க்கும் நமக்கும் தெரியவில்லை. மையக்கதையே மறந்துபோகும் அளவுக்கு ஜவ்வாக இழுத்து வைத்திருக்கிறார்கள்.
தனுஷ் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றமாக இருக்கலாம். இப்படி ஓர் அறிமுகக் காட்சிக்கு தனுஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம்! கதையும் கதாபாத்திரமுமே முக்கியம் என்பதை உணர்ந்து, அவர் இப்படியான கேரக்டரில் நடிக்க ஓகே சொல்லியிருக்கலாம். இந்த படத்திலும் தனுஷ் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார். தொழிலதிபராக நடித்திருக்கும் ஜிம் சர்ப், கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். தோற்றத்திலும் பாவனைகளிலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் அளவுக்கு ஹரீஷ் பேரடி நடித்திருந்தாலும் அவருக்கு காட்சிகள் மிகவும் குறைவு. மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ், சுனைனா போன்றவர்களும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
படத்தில் ஏகப்பட்ட சென்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும் அதை அழுத்தமாகப் பதிய வைக்கவில்லை. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் தனுஷின் அம்மா லாரியில் அடிபட்டு இறந்துபோவது, பிச்சைக்காரி கேரக்டரில் வருபவர் பிரசவத்தில் இறப்பது போன்ற கண்ணீர் விட வைக்கும் காட்சிகளை பெருமூச்சு மட்டுமே விட வைக்கிறார்கள்! அதேபோல், முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகளும் சப்பென்று எழுதப்பட்டுள்ளன. என்னாச்சி சேகர் கம்முலா சார்?
அரசாங்கத்தையே விலைபேசும் வில்லனுக்கு பினாமி என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பது, சுண்டைக்காய் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் திணறுவது போன்றவை நம்பும்படியாக இல்லை.
தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை ஓகே ரகம். தனுஷின் அறிமுகக் காட்சி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே தனித்து தெரிகிறார். பாடல்களில் ’போய் வா… நண்பா’ மட்டுமே மண்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பு தெரிகிறது. குறிப்பாக வில்லன் தொடர்பான காட்சிகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்திய விதம் அபாரம். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வசனம் எழுதியுள்ளார் அகோரம் பன்னீர்செல்வம். “பணமும் அதிகாரமும் இருந்தாதான் நியாயம் ஜெயிக்கும். அதான் வரலாறு” என ஜிம் சர்ப் பேசுவதும், “வாழ்றதுக்குத்தான் பிழைக்கணும்” என தனுஷ் பேசுவதும் கச்சிதம்.
சரியாகத் தொடங்கிய கதை அலைந்து திரிந்து இறுதியில் நீர்த்துப்போவதோடு, படத்தின் நீளமும், கதாபாத்திரங்களுக்கு இடையேயான தெளிவற்ற எழுத்தும் குபேராவை கோபுரம் ஏறவிடாமல் தடுக்கிறது!