அறுவடை முடிந்ததும் என்.எல்.சி-யிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
”2014ஆம் ஆண்டுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குத்தான் ஏக்கருக்கு 25 லட்சம் கொடுக்க முடியும் எனவும், அதற்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வழங்க முடியாது” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி முருகன் என்ற விவசாயி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதேபோல், இந்த இழப்பீட்டுத் தொகையானது இன்றுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 88 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை கோருவதை நீதிமன்றம் ஏற்க கூடாது என வாதிட்டார்.
அதையடுத்த தமிழக அரசு சார்பில், கருணை தொகை வழங்குவதற்கு கிராமங்களில் அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகையானது செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வழங்கப்படும். விவசாயிகள் அறுவடை முடிந்ததும் தங்களின் நிலங்களை என்.எல்.சியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ’கண்முன்னே பயிர் அழிக்கப்படுவதை விவசாயிகளால் தாங்கிக் கொள்ள முடியாதுதான். அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இவர்கள் சேர்ந்து போராடும் போது அரசு சொத்துகள் சேதப்படுத்தப்படுகிறது. அந்த இழப்பீட்டுத் தொகையை அரசு உரியவர்களிடம் வசூலிக்க வேண்டும்.
என்.எல்.சி நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடை முடிந்ததும் நிலத்தை விவசாயிகள் ஒப்படைக்க வேண்டும். புதிய பயிர்கள் எதுவும் பயிரிடக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
அதேபோல், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குத்தான் ஏக்கருக்கு 25 லட்சம் கொடுக்க முடியும். அதற்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வழங்க முடியாது என இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முடித்துவைத்தார்.