தமிழக வெற்றிக் கழகம் மாற்று சக்தி அல்ல; முதன்மை சக்தி என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம் என அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு, 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி காரணமாக தேதியை ஒத்திவைத்தனர்.
மாற்று தேதியில் மாநாடு நடத்துவது தொடர்பான மனுவை காவல் துறையினரிடம் கடந்த 5ஆம் தேதி பொதுச் செயலாளர் ஆனந்த் வழங்கியிருந்த நிலையில், மாநாடு நடக்க உள்ள இடம், பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை, தொண்டர்களுக்கான வாகன நிறுத்துமிடம், உணவு, குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட 42 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதற்கு தவெக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற உள்ள தவெக 2-வது மாநில மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கைப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கைப் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்... இடையில எத்தனை சவால்கள். நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட. அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்...
வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்... இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (வியாழக்கிழமை) மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு...
அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு. 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி...
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.