மதராஸி: மீண்டும் பழைய படம் பெயரில் சிவகார்த்திகேயன்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘மதராஸி’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவி, அதர்வா, லீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். பீரியட் படமான இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.

இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை லட்சுமி மூவிஸ் சார்பில் என். லட்சுமி பிரசாத் தயாரிக்கிறார். இதில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் டைட்டில் டீஸர், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியானது.

இந்தப் படத்துக்கு ‘மதராஸி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதே பெயரில் அர்ஜுன் இயக்கம் நடிப்பில் 2006இல் ஒரு படம் வெளிவந்தது. அப்படத்தின் பெயரை அவரது அனுமதியுடன்தான் வைத்திருப்பார்கள் என நம்பலாம்.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படப் பெயரும் பழைய படப் பெயர்தான். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படமும் பழைய படத்தின் பெயர்தான்.

“எதிர் நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன், பராசக்தி” ஆகிய பட்டியலில் பழைய படப் பெயருடன் சிவகார்த்திகேயனின் மற்றொரு படமாக 'மதராஸி' இணைகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com